ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை _ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகனத்திற்குள் சிக்கி கொண்ட ஓட்டுனரை தீயணைப்பு மீட்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயிலில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையிலிருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ப்ளைவுட் ஏற்றி வந்த லாரி மீது வேகமாக மோதியது . விபத்தில் பிளைவுட் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தனபால் என்பவர் வாகனத்தில் சிக்கிக்கொண்டார். விபத்தில் பலத்த காயமடைந்த தனபாலை லாரியிலிருந்து வெளியே கொண்டு வர முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் தவித்தனர்.
பின்னர் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அங்கு வந்த மீட்புப்படையினர் போராடி கிரேன் மூலம் படுகாயமடைந்த தனபாலை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.