காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்று ஓட்டளித்தவர்கள் யார்‌? திமுகவினர் அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் தலைமை அறிவித்த வேட்பாளர்க்கு‌ எதிராக வாக்களித்தவர்களால் மாவட்ட திமுகவினர்‌ அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-03-04 08:45 GMT

மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ்.

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 இடங்களில் திமுக 32 இடங்களில்  வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களிலும் , பாமக 2 , பாஜக 1 , சுயேச்சை என வெற்றி பெற்றனர். ஒரு வார்டில் வேட்பாளர் மரணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பதவி ஏற்பு விழா நிறைவு பெற்ற பின், இன்று மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக தலைமைக் கழக அறிவிப்பு வேட்பாளராக  மகாலட்சுமி யுவராஜ் போட்டியிட்டார். திடீர் போட்டி காரணமாக திமுக கட்சியை சேர்ந்த சூர்யா ஷோபன்குமார் விருப்ப வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனால் மேயரை தேர்வு செய்ய வாக்களிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மகாலட்சுமி யுவராஜ் இருபத்தி ஒன்பது ஓட்டுகளும், சூர்யா ஷோபன் குமர் 20 ஓட்டுகளும், ஒரு ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மேயராக மகாலட்சுமி யுவராஜ் அறிவிக்கப்பட்டார். இருப்பினும் திமுக கூட்டணி அல்லாத கட்சியினர் 12 பேர், சுயேச்சைகள் இருவர் என இருக்கும் நிலையில்  திமுக வேட்பாளருக்கு எதிராக வாக்களித்துள்ளது அக் கட்சியினர் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் வாக்குகள் எண்ணும்போதும் மன்றத்தின் உள்ளேயும் மன்றத்திற்கு வெளியே கூடியிருந்த திமுகவினருக்கும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News