காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்.
தமிழகம் முழுவதும் நேற்று 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 48 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கலைச்செல்வி மோகன்.
காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக நில அளவை மற்றும் நில ஆவணம் கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும் விரைவில் நடைபெறும் என பலர் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு 16 மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 48 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இதில் கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், அரியலூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஆர்த்தி அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக நில அளவை மற்றும் நில ஆவணம் கூடுதல் இயக்குனராக பணிபுரிந்து வந்த கலைச்செல்வி மோகன் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.பி.ஏ பட்டங்களை பெற்றுள்ள அவர், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பேசும் திறன் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதும், விளை நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மற்றும் விற்பனை மதிப்பு அதிகம் என்பதும், அரசு நிலம் தொழிற்சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட திட்டங்கள், மற்றும் தற்போது இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி என பல்வேறு சவால் நிறைந்த பணிகளை திறன் பட கையாள ஏற்கனவே இத்துறையில் பணியாற்றிய அனுபவம் கை கொடுக்கும் என கருதலாம்.