பேரிடர் பயிற்சி பெற்ற 285 தன்னார்வர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 இடங்களில் கடந்த 21 ஆம் தேதி முதல் 12 நாட்களாக நடைபெற்ற பயிற்சி வகுப்பு இன்றுடன் நிறைவு பெற்றது;
ஆப்தமித்ரா திட்டமானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து மாநில பேரிடர் மேலாண்மையால் நடத்தப்படும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி திட்டமாகும்.
இப்பயிற்சி திட்டத்தின் நோக்கம் பேரிடர்களை புரிந்து கொள்ளுதல், தயார் நிலைப்படுத்துதல், அடிப்படைத் தேவை மற்றும் சமுதாய மக்களை காப்பாற்றும் மீட்புப் பணிகள் ஆகிய திறன்களை மேம்படுத்தும் திட்டமாகும்.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னர் தங்களது இடங்களில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை அறிந்துக்கொள்ளுதல் வேண்டும்.
இப்பயிற்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் பேரிடர்களை கையாளும் திறன் பற்றியும் உயிர் சேதமின்றி மீட்புப் பணியில் சிறந்த முறையில் ஈடுபடுவது தொடர்பான திறன் வளர்ப்பு கொண்ட பயிற்சியாகும்.இப்பயிற்சி மூலம் பயிற்சி பெற்றவர்கள், எதிர்வரும் பேரிடர் காலங்களில் தங்களின் பங்களிப்பை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து திறன் பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட உதவிட வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 500 தன்னார்வலர்களில், 215 தன்னார்வலர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 285 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் கட்டமாக ஜனவரி மாதத்தில் பயிற்சிகள் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி மற்றும் குன்றத்தூர் முத்துக்குமரன் தொழில் நுட்பக் கல்லூரியில் இரண்டாம் கட்ட தன்னார்வலற்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா துவக்கி வைத்தார்.
கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு 26 வகையான பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் , 108 அவசர கால ஊர்தி அதிகாரிகள், தேசிய , மாநில பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று பயிற்சி பெற்ற 285 தன்னார்வலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதில் , வடகிழக்கு பருவமழை காலங்களில் , பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தங்களது வட்டங்களில் ஒரு குழுவாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் அவ்வப்போது தொடர்பில் இணைந்து பேரிடர் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் மாவட்டம் முழுவதும் உயிர் சேதம், பொருள் சேதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இறுதியாக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி நன்றி தெரிவித்தார்.