7வது தேசிய கைத்தறி தினம் - பல லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
காஞ்சிபுரத்தில் 7வது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பல லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ வழங்கினர்.
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கமானது 1905ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்றதால் அதனை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக அறிவிக்கபட்டது.
கைத்தொழில் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்த அவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 7ஆம் தேதி கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2015 சென்னையில் பாரதப் பிரதமரால் முதல் தேசிய கைத்தறி தினம் துவக்கி வைக்கப்பட்டது. அவ்வகையில் இன்று 7வது தேசிய கைத்தறி தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி மற்றும் பட்டு சேலைகளின் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அதன்பின் நடைபெற்ற விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ஐந்து நபர்களுக்கு தலா 10,000 மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டது. அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் 12 நபர்களுக்கு ஆயிரம் வீதம் மாதம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. 21 நபர்களுக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு பங்களிப்புடன் கூடிய சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை ஆணைகளும் வழங்கப்பட்டது.
அண்ணா மற்றும் முருகன் பட்டு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களுக்கு எலக்ட்ரானிக் ஜக்கார்டு மெஷின் உள்ளிட்ட நெசவாளர் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மொத்தம் 50 நெசவாளர்களுக்கு 18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் நெசவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.