காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய பகுதி பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 254 கோடி மற்றும் கழிவுநீர் நிலையம் நவீன முறையில் அமைக்க 68 கோடி என, 322 கோடி ரூபாய்க்கு பணிகள் துவங்க உள்ளன. இதன் வாயிலாக, 15,000 பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ் 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு, 1975ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பே, 40 வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், நகரவாசிகளுக்கு இத்திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. நகரப்பகுதியில் குடியிருப்பு, வணிகம் என மொத்தம் 21,621 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன.
இங்கு சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விடுவதற்கு, திருக்காலிமேடில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் நகருடன், தேனம்பாக்கம், ஓரிக்கை, நத்தப்பேட்டை ஆகிய ஊராட்சிகளும், செவிலிமேடு பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், 2013ல் இணைந்தன.
அன்று முதல், புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, 290 கோடி ரூபாய் கேட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி இரு ஆண்டுகளுக்கு முன், அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தது. ஆனால், நிதி கிடைக்காமல் பாதாள சாக்கடை திட்டம் காலதாமதம் ஆனது.
இந்நிலையில், உலக வங்கி நிதியுதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில், கடந்தாண்டு உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பின், இத்திட்டத்திற்கான நிதியுதவி செய்துள்ளனர். செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 254 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கான அடுத்தகட்ட பணியாக, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்தவுடன், 12 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. புதிய பகுதிகளிலும், பாதாள சாக்கடை பணிகள் முடிந்தால், மாநகராட்சி முழுதும் பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறும்.
நவீன முறையில் இந்த பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. கழிவுநீர் தொட்டிகள், குழாய்கள் தயாராக கட்டப்பட்டு, பூமியில் புதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும்.
நத்தப்பேட்டையில் ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு நிலையம் 40 ஆண்டுகள் பழமையானது. புதிதாக அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. சென்னை, தாம்பரம் போன்ற இடங்களில் தலைகீழ் சவ்வூடு முறையில் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. அதுபோல, நவீன முறையில் கழிவுநீர் நிலையம் அமைக்கப்படவுள்ளது