மாத்திரைகளை கூரியர் மூலம் அனுப்பிய வழக்கு மருந்தக உரிமையாளர் உள்பட மூவர் கைது
ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் இருந்து மருத்துவர்சீட்டு இல்லாமல் கூரியரில் மாத்திரை அனுப்பி வைத்த மருந்தக உரிமையாளர் கைது
வலி நிவாரணி மாத்திரைகளை கூரியர் மூலம் அனுப்பிய வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் இருவர் உட்பட மூவர் கைது
சென்னை பரங்கிமலை காவல் நிலையத்திற்குட்பட்ட கத்திப்பாரா தண்டுமாநகர் பகுதியில் கடந்த 30ம் தேதி தனியார் கூரியர் அலுவலகத்தில் வந்த சந்தேகத்திற்கு இடமான பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 700 டைடால் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது .
அதனைத் தொடர்ந்து, பரங்கி மலை போலீஸார் பார்சலில் வந்த கைப்பேசி எண்களை வைத்து விசாரணை செய்தபோது இந்த வலி நிவாரண மாத்திரைகளை புறநகர் பகுதிகளில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு போதைக்காக விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக வலி நிவாரணி மாத்திரைகளை இணையவழியில் ஆர்டர் செய்து கூரியர் மூலம் வாங்கிய கெவின் பாபு (22), விமல் ராஜ் (22), அருண் (22), ஜெகநாதன் (19), அருண் (21) ஆகிய 5 பேரை கைது செய்து கடந்த 30ம் தேதி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து முறையான மருத்துவ பரிந்துரை சீட்டு இல்லாமல் கூரியரில் வலி நிவாரண மாத்திரைகளை அனுப்பிவைத்த ஆந்திராவைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் சீனிவாச ராவ் (42), ரமேஷ் குமார் (41) மற்றும் மருந்தக ஊழியர் ஸ்ரீராம் (42) ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சென்று கைது செய்து சென்னை வரவழைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.