பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி நன்றி கூறிய டி.எஸ்.பி.

பணியிட மாறுதல் பெற்ற உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி மணிமொழியன், நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்.;

Update: 2022-01-31 15:22 GMT

மரக்கன்றுகளை வழங்கி நன்றி தெரிவித்த டி.எஸ்.பி., மணிமொழியன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் எலவனாசூர்கோட்டை, எடைகள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என ஐந்து காவல் நிலையம் உள்ளது.

இதில் திருநாவலூர் காவல் நிலையம் சரகத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டரும், உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு ஓர் இன்ஸ்பெக்டரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் என மூன்று இன்ஸ்பெக்டர்களுக்கு உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு ஒரு துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 12.06.2021ஆம் தேதி உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக சி.எம்.ஆர்.மணிமொழியன் பொறுப்பேற்ற பின்னர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தனது செல் போன் எண்ணை கொடுத்து தங்கள் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் உட்பட்ட, கனிம வளங்கள் திருட்டு நடைபெற்றாலும் சட்டவிரோதமாக எது நடந்தாலும், எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் உண்மையான தகவலுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தற்போது டி.எஸ்.பி மணிமொழியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கிய பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.

இவர் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளே பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தனது பணியை தொடங்கினார்.

மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உளுந்தூர்பேட்டையில் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையங்கள்,சந்திப்பு சாலைகள், மற்றும் பெரும்பாலான கிராமங்களில் இளைஞர்களின் உதவியுடனும் பொதுமக்களின் உதவியோடும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்.

உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக பணி செய்யும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் பாராட்டுகளையும், கேடயங்களையும்,வழங்கி காவலர்களை ஊக்குவித்தார்.

Tags:    

Similar News