வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Update: 2021-09-20 16:06 GMT

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெவித்துள்ளதாவது:

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 1,889 வாக்குச் சாவடிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 24.09.2021 அன்றும், இரண்டாம் கட்ட பயிற்சி 29.09.2021 அன்றும் கடைசி பயிற்சி தேர்தலுக்கு முந்தைய நாளான 05.10.2021 மற்றும் 08.10.2021 ஆகிய நாட்களில் நடைபெறும்.

மேலும், வாக்குச்சாவடி பணியாளர்கள் அப்பணியினை ஏற்க மறுத்தால் தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதி 1995 - 5(3) மற்றும் தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 -ன்படி அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து தேர்தல் அலுவலர்களும் கட்டாயமாக கோவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றினை தங்களது கைப்பேசியின் மூலமாக பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களும் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News