புளியங்கொட்டை கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி : பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் புளியங்கொட்டை கிராமத்தில் மினி குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உடபட்ட புளியங்கொட்டை கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தின் வடக்கு தெருவில் புதிதாக மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
ஆனால் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை.இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்கு வெகுதூரம் கால்கடுக்க நடந்து சென்று குடங்களில் தண்ணீரை பிடித்து வர வேண்டிய சூழ்நிலை நிலவிவருகிறது.
குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மினி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.