மக்களை தேடி மருத்துவ திட்டம் நிறுத்தம் கள்ளக்குறிச்சியில் பயனாளிகள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நிறுத்தப்பட்டதா என பயனாளிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

Update: 2021-12-23 14:09 GMT

கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நிறுத்தப்பட்டதா, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டம் மூலமாக மருந்து வழங்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ள உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். சிறப்பு பயனாளி பயனர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் பெட்டியில் வைத்து வழங்கப்பட்டது.

இதன் காரணமாக மருந்து வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்கள் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்திட்டம் துவக்கத்தில் கள்ளக்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுகாதார ஆய்வாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

பல மாதங்களாக நடந்த பணிகளுக்கு பின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் இந்த திட்டத்தின் மூலம் மருந்து வழங்கப்பட்டது அத்துடன் இந்த திட்டம் கள்ளக்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை எனவே இதன் மூலம் இனி உங்களுக்கு மருந்து வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து வீடுகளுக்குச் சென்று மருந்து வழங்குவதை திடீரென நிறுத்திக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த திட்டம் செயல்பட்டு இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகர் பகுதி மக்களுக்கு மட்டும் இல்லை என கூறியதால்  மருந்து பெற்ற பயனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் கள்ளக்குறிச்சி நகர பகுதி மக்களுக்கு மட்டும் செயல்படுத்த முடியாது என கூறி மருந்து வழங்க மறுப்பது இப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரப்பணிகள் துறையில் நிலவும் இந்த பிரச்சனைக்கு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News