கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி: ஒரு பார்வை

தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றப் பிரிவுகளில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்றும் விழுப்புரம் மாவட்டத்திலும் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில் உள்ளன

Update: 2024-03-17 16:14 GMT

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 14-வது தொகுதி கள்ளக்குறிச்சி. 2008-ஆம் தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி கள்ளக்குறிச்சி.

வடதமிழகத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கள்ளக்குறிச்சி நகரம்.

விவசாயம், குச்சி வள்ளிக் கிழங்கில் மாவு தயாரித்து அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

அதைப் போலவே தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றப் பிரிவுகளில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன. ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்றுப் பிரிவுகளும் சேலம் மாவட்டத்தில் உள்ளன.

1967, 1971 ஆகிய இரண்டு தேர்தல்களில் முன்பு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இடம் பெற்றிருந்தது. அந்த இரண்டு முறையும் திமுக-வை சேர்ந்த எம்.தெய்வீகன் வெற்றி பெற்றார். பிறகு இந்த தொகுதியில் தற்போது இடம் பெற்றுள்ள சட்டமன்றப் பிரிவுகள் கடலூர், ராசிபுரம் மக்களவைத் தொகுதிகளில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்தன.

வேளாண்மையிலோ, சோகோ தொழிற்சாலை எனும் வேளாண் சார் தொழிலிலோ போதிய வேலைவாய்ப்பு பெருகாத காரணத்தால் வேளாண் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து பெங்களூருக்கும், கேரளாவுக்கும் கூலி வேலைக்காக சென்றுள்ளனர்.

கரும்பு விவசாயம் ஓரளவு வெற்றிகரமாக நடக்க இது ஒரு காரணம். கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைப்பதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அது நடக்கவில்லை.

வேளாண் நெருக்கடிகள், மாவட்ட உருவாக்கம் பற்றிய அறிவிப்பு, சேகோ தொழில் நசிவு ஆகியவை இந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் உள்ளூர் காரணிகளாக இருக்கும்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

2009 ஆதி சங்கர் (திமுக)

2014 க. காமராஜ் (அதிமுக)

2019 கவுதம சிகாமணி (திமுக)

Tags:    

Similar News