கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாட்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரா புரத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் கொளுத்தியது. அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு சுமார் 30 நிமிடம் பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. லேசான சாரலுடன் தொடங்கிய மழையானது சூறை காற்றுடம் கூடிய பலத்த, மழையாகவும் ஆலங்கட்டி மழையாகவும் கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது. இதேபோல் உளுந்தூர்பேட்டையிலும் நேற்று 30 நிமிடம் ஆலங்கட்டியுடன் கனமழை பெய்தது. இதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த இளைஞர்கள் மழையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். மேலும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.