வீடு கட்டாமலேயே 30 பேருக்கு முழு பணம்.. கல்வராயன் மலையில் அதிர்ச்சி

கல்வராயன்மலையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-10-28 08:30 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள மேல் வெள்ளார் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2016-17 மற்றும் 2023-24 ஆம் நிதியாண்டில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கான சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் வட்டார வள அலுவலர் சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது.

இத்தணிக்கையின் போது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டாத 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக மூலம் முழு தொகையையும் செலுத்தியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் வீடு கட்டிய பயனாளிகளுக்கு அரசு வழங்கிய சிமெண்ட் மற்றும் கம்பிகள் வழங்கப்படவில்லை எனவும் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வட்டார வள அலுவலர் சத்யராஜ், வீடு கட்டாத பயனாளிகள் அனைவரும் தொகையை அரசு வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

அப்போது, வீடு கட்டுவதற்காக அரசு வழங்கும் சிமெண்ட் மற்றும் கம்பிகள் எங்கே எனவும், இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் என பொதுமக்கள் கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News