கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்கா, சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு (34) . இவர் கடந்த 14.02.2022-ந் தேதி அனைகரைகோட்டாலம் அருகே 108 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போது கள்ளக்குறிச்சி காவல்துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
அதே போன்று சின்னசேலம், கல்லாநத்தம் கிராமம் இராஜேந்திரன் (39) என்பவர் கடந்த 17.02.2022-ந் தேதி கனியாமூர் ஆற்றுப்பாலம் அருகே லாரிடியூப்பில் 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போது சின்னசேலம் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்படார்.
இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி காவல்நிலையம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்கள் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.