பள்ளிக்கு மாணவர்களின் உடல் நலனை கண்காணிக்க கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 69 அரசு உயர்நிலைப் பள்ளிகள் ,8 அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் ,34 தனியார் உயர்நிலை பள்ளிகள்,76 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 47 தனியார் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 244 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு செயல்படத் துவங்கின.
அதன்படி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை மானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் அனைவரும் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தியும் 18 வயதிற்கு மேற்பட்ட மாணாக்கர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் 50 சதவீத இருக்கைகளுடன் கூடிய வகுப்பறைகள் செயல்படுவது குறித்தும் போதிய வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் மாணவ மாணவிகளை தினந்தோறும் ஆசிரிய பெருமக்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்து கண்காணித்திட அறிவுறுத்தினார். 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களிடம் தொழிற்கல்வி தொடர்பாகவும் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு தொடர்பாக கலந்துரையாடினார். 18 வயது நிரம்பிய மாணவ மாணவியர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ளவும் இவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு முகாமினை மாணவ-மாணவியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.