நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் நடைபயிற்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் அழைப்பு
பொதுமக்கள் தங்களது உடல்நலம் காக்கும் பொருட்டு நடை பயிற்சி மேற்கொள்ள முன்வர வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தல்;
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழகம் முழுவதும் 18 முதல் 69 வயதுடைய மக்களிடையே நடத்தப்பட்ட களஆய்வின் இறுதி அறிக்கையின்படி, 23.4 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தினாலும், 7.1 சதவீதம் பேர் சர்க்கரை நோயினாலும், 10.5 சத வீதம் பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினரை பாதிப்பிலிருந்து காத்திடும் பொருட்டு, தமிழக சுகாதாரதுறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை வருகிற 4.11.2023 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதாரதுறை சார்பில், 4.11.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து தொடங்கி கச்சிராப்பாளையம் சாலையில் குதிரைச்சந்தல் பேருந்து நிறுத்தம் வரை 4 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடையும் நடைபயிற்சியினை தொடங்கி வைக்க உள்ளனர்.
இத்திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி நடப்போம் நலம்பெறு வோம் திட்டம் குறித்து மாவட்ட நடைப்பயண குழுவின் ஆலோசனைபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராஜா கள ஆய்வு மேற்கொண்டதன்படி நடைபயிற்சிக்கான பாதை முடிவு செய்யப்பட்டது.
நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தில் பொதுமக்கள் தங்களது உடல்நலம் காக்கும் பொருட்டு நடை பயிற்சி மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தன்னார்வத்தோடு இதில் கலந்து கொண்டு இதய நோய், ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், மன அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.