தியாகதுருகம், ரிஷிவந்தியம் விதைப்பண்ணைகளில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதிகளில் விதைப்பண்ணை நாற்றங்கால் வயலில் கள்ளக்குறிச்சி வேளாண்இணை இயக்குனர் ஆய்வு
தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டு கிராமத்தில் விதைப்பண்ணை நாற்றங்கால் வயலில் கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த விவசாயிகளிடம், விதை நெல் வாங்குவது, வயல்களில் பசுந்தாள் பயிர் செய்வது உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.
மேலும் நாற்றங்காலில் பூச்சித்தாக்குதல் பற்றி பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம், நடவுக்கு முன்பாக அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுரம் இடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள உளுந்து விதைப்பண்ணை வயலையும் அவர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து வடதொரசலூர் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட உளுந்து விதைகள் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ், உதவி விதை அலுவலர் மொட்டையாப்பிள்ளை, உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ரிஷிவந்தியம்
இதையடுத்து ரிஷிவந்தியம் வேளாண்மை துறை சார்பில் வாணாபுரம், எடுத்தனூர் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள மணிலா விதை பண்ணைகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ரிஷிவந்தியம் அருகே நூரோலை கிராமத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு மற்றும் நெல் பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்,
பின்னர் வாணாபுரம் கிராமத்தில் தென்னங் கன்றுகளை நட்டு வைத்தார். ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கம்பு, நெல், உளுந்து, தக்கைப்பூண்டு விதைகள் மற்றும் மணிலா விதைகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் உயிர் உரங்கள் மற்றும் விதைகளை தகுதியான விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது ரிஷிவந்தியம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜ், ரிஷிவந்தியம் உதவி விதை அலுவலர் செந்தில்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவசங்கர், சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.