நாம் கேட்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது: ஆளுநர் ரவி பேச்சு
நீலகிரி மாவட்டத்தில் உயர் கல்வி நிறுவன பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பது என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது
நாம் கேட்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது என துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் 'உயர் கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
உதகையில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற மாநாட்டை தொடக்கி வைத்த ஆளுநர் ரவி, பேசியதாவது: தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் அது வேகமாக மாறி வருகிறது. இப்போது கணினியின் தேவை ரொம்பவே அதிகரித்துவிட்டது. இதனால் கணினி கல்வி என்பது இப்போது அவசியமாகிவிட்டது. நமது நாட்டில் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் இப்போது பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுத்து வருகின்றன.
இந்த காலத்தில் ஏஐ தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கேற்ப நாம் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும். இப்போது இளைஞர்களுக்குப் படிப்புக்கு ஏற்ப வேலை கிடைப்பதில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அடிப்படை கல்விக்குப் பெரியளவில் முக்கியத்துவம் தரப்பட்டது. அதேபோல நாம் இப்போது உயர் கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
சம்பளம் அதிகம்: ஐடிஐ பாலிடெக்னிக் மாணவர்கள் கூட இப்போது பொறியியல் பட்டதாரிகளை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அவர்களின் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சியும் கூட பாதிக்கப்படுகிறது. இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல இப்போது இளைஞர்கள் பலருக்கும் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது.
இதன் காரணமாகவே தொழில்நுட்ப நூல்களைத் தாய்மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்குப் பெரியளவில் உதவும், சீனா, ஜப்பான் நாடுகளில் தாய்மொழியிலேயே படிப்பு இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் ஆங்கில மோகம் அதிகமாக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் தருகிறோம். இதில் இருந்து வீசப்பட்டு தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
இப்போது பார்த்தீர்கள் என்றால் புவிசார் அரசியல் காரணமாகப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருகின்றன. நமது நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டிருப்பதே இதற்குக் காரணம். இந்தியா வேறு எந்த நாடுகளைக் காட்டிலும் வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டிற்கு வர இதுவும் ஒரு முக்கிய காரணம்.
முதலீடுகள்: நல்ல மனித வளத்தைத் தமிழகம் உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகள் வரும். நாம் கேட்பதாலோ தொழிலதிபர்களைச் சந்திப்பதாலோ முதலீடுகள் வந்துவிடாது.. முதலீடு செய்வோர் தங்களுக்கு லாபம் வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். ஒரு டாலர் முதலீடு செய்தால், குறைந்தது 1.5 டாலர் லாபம் வர வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்..
இப்படிச் சிறந்த சூழலை உருவாக்கினால் மட்டுமே முதலீடுகளைக் கவர முடியும். இப்போது இந்தியாவில் பல மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு முதலீடுகளை ஈர்க்கின்றன. உதாரணத்திற்கு ஹரியானாவைச் சொல்லலாம். அவர்கள் அதிக சர்வதேச முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக் கல்விமுறை காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்வதே வளர்ச்சிக்கு உதவும் என்றார் ஆளுநர் ரவி.
மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.