வளர்ச்சிப்பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் : முதலமைச்சர் நியமனம்..!

தமிழகத்தில் மாவட்டங்களின் வளர்ச்சிப்பணிகளை விரைவுப்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2024-10-09 05:00 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -கோப்பு படம் 

தமிழகத்தின் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும் பிற நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும், இயற்கைக் சீற்றம் மற்றும் நோய் பரவுதல் போன்ற பணிகளை கண்காணிப்புச் செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும் பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகள் முறையாக சென்று சேர்கின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று பரவல் போன்ற பிற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அமைச்சர்கள் சிலரை மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி நெல்லை மாவட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தேனி மாவட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தர்மபுரி மாவட்டத்துக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

தென்காசி மாவட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்,

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவைக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பெரம்பலூர் மாவட்டத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மயிலாடுதுறைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் நெல்லை மாவட்டத்தை கவனித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கன்னியாகுமரி ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மாவட்டமே அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News