சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடம் திறப்பு
சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம், ஹோம் சாலையில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பணிபுரியும் இடங்களில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பணிநிமித்தம் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்திற்கு அருகில் தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசியத் தேவையாக உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழ்நாடு அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து வருகிறது.
பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கிட "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்" தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் 226 மகளிர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்கள், சென்னை அடையாறு,
விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13.07.2023 அன்று திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் தாம்பரம் சானடோரியம் பகுதியில், நான்கு தளங்களில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் ன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் வே. அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் சானடோரியத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.