தமிழ்நாட்டில் நாய்க்கடி பாதிப்பு; இரண்டு மடங்காக அதிகரிப்பு!

கடந்த 2022ம் ஆண்டைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நாய்க்கடி பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

Update: 2024-10-04 04:05 GMT

நாய்க்கடி பாதிப்பு அதிகரிப்பு ( கோப்பு படம்)

தமிழகத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவு பெருகி விட்டது. இதுவரை தெருநாய்கள் எண்ணிக்கை எப்படி அதிகரித்தது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. உள்ளாட்சிகள் தெருநாய்களை கொல்லக்கூடாது. தேவைப்பட்டால் கருத்தடை செய்யலாம் என மட்டும் கோர்ட்டும், அரசும் அறிவுறுத்தி உள்ளது. சில உள்ளாட்சிகள் கருத்தடை செய்தாலும், பல உள்ளாட்சிகள் கருத்தடை செய்வதை போல் கணக்கு மட்டும் எழுதி உள்ளன.

ஆக இதிலும் முறைகேடு நடப்பதால், நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே தான் வருகிறது. குறைய வழியை காணோம். இதனால் நாயிடம் கடிப்படுபவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடந்த நாய்க்கடி சம்பவங்களின் எண்ணிக்கை பற்றி பார்க்கலாம்.

கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 3.65 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதுவே தற்போது அதாவது 2024ம் ஆண்டில் 6.41 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் ரேபிஸ் நோய் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்தனர். இதுவே 2024ம் ஆண்டு 34 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேலாவது தமிழக அரசு தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

Similar News