மத்திய, மாநில அரசு திட்டங்களில் அள்ளிக்குவிக்கும் அதிகாரிகள்
இன்று அனைத்து அரசுத்துறைகளிலும் லஞ்சம், நிர்வாகச்சீர்கேடு என்ற பிரச்னை தான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் அதனை தாண்டி நடக்கும் விஷயங்கள் யாருக்கும் தெரியவில்லை.;
பைல் படம்.
மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாடு ஏதுமின்றி நாடு முழுவதும் அனைத்து அரசுத்துறைகளிலும் லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு தலைவிரித்தாடுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த பணிகளாக இருந்தாலும் அரசு எந்திரங்கள் முடங்கி கிடக்கிறது என்பதும் தெரியும். அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையில் அதிகாரிகளுக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதும் தெரியும். இத்தனை தெரிந்தாலும், இதுவரை தெரியாத ஒரு புது விஷயம் ஒன்று தற்போது பரவலாக முனுமுனுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களின் வழியாக ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மானியங்களை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில திட்டங்களில் பல லட்சங்கள் கூட மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக உணவு சார்ந்த அத்தனை உற்பத்தி துறைகளிலும் அரசு மானியங்களை கணக்கு வழக்கின்றி அள்ளிக் கொடுக்கிறது. தொழில்துறைகளிலுஙம் மானியங்களை வழங்கி வருகிறது. இந்த மானியங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவே அரசு நிர்வாகம் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தனை மானிய திட்டங்களும் பெயரளவில், பேப்பர் அளவில் தான் செயல்படுகிறது.
அரசுத்துறை அதிகாரிகள் முதலமைச்சர், அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் திட்டங்களை தொடங்கி வைக்கும் போது மட்டும் ஓரிரு பயனாளிகளை அழைத்து வழங்குகின்றனர். அந்த பயனாளிகளும் போலிகளாக இருக்கின்றனர். இது பற்றிய பல விவரங்களும் சமூக வலைதளங்களி்ல வெளியாகி விட்டன. ஒரிஜனலாக இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட உறவினர்களாக இருக்கின்றனர். திட்டத்தின் மற்ற பயன்கள் அனைத்தும் பேப்பர் அளவில் நிறைவு பெற்று அதிகாரிகளின் கணக்கிற்கு சென்று சேர்ந்து விடுகிறது.
பல திட்டங்களை அந்த துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலரின் பெயர்களில் தங்களின் சக அதிகாரிகளின் மூலம் வாங்கிக் கொள்கின்றனர். ஆக திட்டத்தை பற்றி மக்களிடம் அதிகாரிகள் யாரும் தெரிவிப்பதும் இல்லை. அப்படி மக்களே தெரிந்து கொண்டு திட்டத்திற்கு விண்ணப்பித்தாலும், அவர்களிடம் அதைக்கொடு, இதைக்கொடு எனக்கேட்டு, அலைக்கழித்து அவர்களை ஓட வைத்து விடுகின்றனர். சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொன்னால் அரசு மானியத்திற்காக வழங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்களும் அதிகாரிகளால் பங்கு போடப்படுகிறது.
இதற்கேற்ற வகைகளில் துல்லியமாக ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாலும், ஆடிட்டிங் அறிக்கையில் பணம் கொடுத்து ஒப்புதல் பெறப்பட்டு விடுவதாலும், எந்த அதிகாரிக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. மக்கள் கவனத்தை எல்லாமே ரேஷன் கடை முறைகேடுகளின் பக்கம் திருப்பி விட்டு, அரசு திட்டங்களில் அதிகாரிகள் அடிக்கும் கொள்ளை வரம்பு மீறிப்போய்க் கொண்டு உள்ளது. இந்த கொள்ளையில் அடிமட்டம் முதல் அதாவது அலுவலக பியூன் முதல் அத்துறையின் உச்சகட்ட அதிகாரிகள் வரை பங்கு போகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள், உபகரணங்கள் இல்லை என ஐகோர்ட் கிளை கிழியாய் கிழித்தும் கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம் இது போன்ற திட்டமிட்ட, நிரூபிக்கவே முடியாத விஷயங்களையாக கண்டு கொள்ளப்போகிறது.