கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் வரி வசூல் அமல்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை போல், கிராம ஊராட்சியிலும், 'ஆன்லைன்' வரிவசூல் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.;
பைல் படம்.
தமிழகத்தில், 385 ஊராட்சி ஒன்றியங்களில், 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளை, ஊராட்சிகள் செய்து வருகின்றன. ஊராட்சிகளில், ரசீது புத்தகம் வாயிலாக, ரொக்கமாக மட்டுமே வரிவசூல் நடக்கிறது. வளர்ந்த ஊராட்சிகளில் மட்டும், கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படுகிறது. வரி வருவாயை, வங்கி கணக்கு வாயிலாக கையாள வசதியாக, 'ஆன்லைன்' வரிவசூல் நடைமுறை, நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன் வரிவசூல் 10ம் தேதி முதல், வரிவசூல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதற்காக, 'VP TAX' என்ற இணையதள வசதி அறிமுகம் செய்துள்ளது. தமிழக ஊராட்சிகளில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வர்த்தக உரிமம், இதர வரவினம் ஏழு என, வருவாய் இனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
'ஆன்லைன்' வரி செலுத்தும் இணையத்தில், சொத்துவரி கணக்கீடு, உரிமையாளர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை, விரைவாக வரி செலுத்தும் வசதி, வரி செலுத்திய விவரம் ஆகியவற்றை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சிகளில், 'ஆன்லைன்' வரிவசூல் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி, வரி விதிப்பு எண், மொபைல் எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய வரியை, 'ஆன்லைன்' மூலம் செலுத்தலாம். அதற்கான ரசீதையும் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றனர்.