பலத்த மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-17 01:56 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் 

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென் இலங்கை கடற்கரையையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஞாயிற்றுக்கிழமை டிச.17 தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். இதனால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை டிச.18 பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (டிச.19-22) வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. மீனம்பாக்கம் (சென்னை) 40, ஜெயங்கொண்டம், கொள்ளிடம், கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), வந்தவாசி தலா 30.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இலங்கை கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறு முதல் செவ்வாய் (டிச.17-19) வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News