சௌராஷ்டிர மக்கள் ஏன் தமிழகத்தில் குடியேறினார்கள்? ஒரு வரலாற்று பதிவு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் குடியேறிய சௌராஷ்டிரா மக்கள் இன்று தமிழகத்தையே தாயகமாக,எண்ணி வாழ்ந்து வருகின்றனர்.

Update: 2022-04-06 11:07 GMT

நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சௌராஷ்டிரா மக்கள்.(மாதிரி படம்)

சௌராஷ்டிர மக்கள் நெசவுக்குப் பெயர் பெற்றவர்கள். குறிப்பாக மதுரையில் சௌராஷ்டிரர்கள் அதிகமான எண்ணிக்கையில் குடியேறி இருப்பது ஏன்? என்பதற்கு காரணங்கள் உள்ளன.

சௌராஷ்டிரா மக்கள் நெசவு செய்வதில் தனித்துவமான திறமை பெற்றிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது, சௌராஷ்டிர சமூக மக்கள்  குஜராத்தில் வாழ்ந்து தென் இந்தியாவிற்கு வந்தார்கள். அவர்களை  நாயக்க மன்னர்கள் மதுரையில் குடியேறச்செய்தனர். உலகப் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனைக்கு அருகில் நெசவு செய்வதற்காகவே சௌராஷ்டிர மக்கள் வரவழைக்கப்பட்டனர்.

இப்போதும் கூட, திருமலை நாயக்கர் அரண்மனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சௌராஷ்டிர மக்கள் நெருக்கமாக வாழ்வதை நாம் காணமுடிகிறது. அவர்களின் குடியேற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதனால் அவர்கள் தமிழகத்தையே தாயகமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர்.

சௌராஷ்டிரியர்கள் முதலில் கௌட பிராமணர்கள் மற்றும் பஞ்ச-கௌடா பிராமணர்களை சேர்ந்தவர்கள். அவர்கள் தெற்கு நோக்கி  இடம்பெயர்ந்த பிறகு அவர்கள் பொதுவாக சௌராஷ்டிர பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். இன்னும் அவர்களுக்கு தற்போதைய குஜராத்தில் பூர்வீக வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கஜினியின் மஹ்மூத் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, சோமநாத் கோயில் வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர், 11ம் நூற்றாண்டில் தெற்கு குஜராத் பகுதியில் இருந்து சௌராஷ்டிரா மக்கள் இடம்பெயர்ந்தனர். 13ம் நூற்றாண்டு வரை யாதவ மன்னர்களின் ஆட்சியின் போது சௌராஷ்டிரியர்கள், மகாராஷ்டிராவின் இன்றைய தௌலதாபாத்தில் உள்ள தேவகிரி பகுதியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கிபி 14 ம் நூற்றாண்டில் யாதவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மன்னர்களின் அழைப்பின் பேரில் இன்றைய கர்நாடகாவில் உள்ள ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகரப் பேரரசுக்குச் சென்றனர். விஜயநகரப் பேரரசின் விரிவாக்கம் 14ம் நூற்றாண்டில் சௌராஷ்டிரியர்களை தென்னிந்தியாவிற்குள் கொண்டு வந்தது.

ஏனெனில் அவர்கள் சிறந்த பட்டு ஆடைகள் உற்பத்தியாளர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட்டனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர், 16ம் நூற்றாண்டின் மத்தியில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களால் சௌராஷ்டிர மக்கள் வரவேற்கப்பட்டனர்.17ம் நூற்றாண்டின் போது மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குடியேற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் நெசவுத்தொழில் பிரபலமானதோ அங்கெல்லாம் அவர்கள் பரவலாக குடியேறியுள்ளனர்.  

சில நிபுணர்களின் கூற்றுப்படி, சௌராஷ்டிரா என்ற பெயர் 'சௌரா' ராஷ்டிராவிலிருந்து பெறப்பட்டது. சமஸ்கிருதத்தில் 'சௌரா' என்றால் சூரியன், 'ராஷ்டிரம்' என்றால் நாடு. அதாவது, சூரியனின் நாடு என்று பொருளாகிறது. இந்தப் பகுதியில் பழங்காலத்தில் 12 சூரியக் கோயில்கள் இருந்தன என வரலாறு கூறுகிறது.

இன்று சௌராஷ்டியர்கள்  தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News