ஊர்க்காவல்படைக்கு ரூ. 27 கோடியே 49 லட்சம் சம்பள பாக்கி
தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படைக்கு 27 கோடியே 49 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. அதனை அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 500 பேர் ஊர்க்காவல் படையில் பணிபுரிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை 14 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 2500 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து பிரச்னைகளின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். வேலை செய்தால் ஒரு நாளைக்கு 560 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மாதந்தோறும் வேலை பார்த்த சம்பளம் கடந்த செப்டம்பர் மாதம் வரை பாக்கியின்றி வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் கொரோனா காலத்தில் இவர்கள் பணிபுரிந்த போது வழங்க வேண்டிய சம்பள பாக்கி இதுவரை வழங்கப்படவில்லை. மொத்தம் கொரோனா கால சம்பள பாக்கி மட்டும், 27 கோடியே 49 லட்சம் ரூபாய் இவர்களுக்கு வழங்க வேண்டி உள்ளது. இதில் சென்னையில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் 5 கோடியே 20 லட்சம் சம்பள பாக்கி உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவலால் இவர்களுக்கு மீண்டும் கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கப்படும் சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. அரசு பழைய சம்பள பாக்கியை வழங்கினால் அடுத்து பணிபுரிய ஊக்கம் கிடைக்கும் என ஊர்க்காவல் படையினர் தெரிவித்தனர்.