நவ.1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினம்: கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி
நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் ஆணி வேர் அதனால் திமுக அரசு உள்ளாட்சியை வலுப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட பேரவையின் போது விதி 110ன் கீழ் நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய சுதந்திர தினம், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
அதன்படி 2022ம் ஆண்டுக்கான உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் உள்ளாட்சி குறித்த கண்காட்சி நடத்துதல், கலந்துரையாடல்கள் நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் உள்ளாட்சி தினம் குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும், இந்த கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தலாம் என்றும், அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல் நிலை நீர்த்தேக்கக் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, உள்ளாட்சிகள் தினத்தினை கொண்டாடும் விதமாக சிறப்பாக செயலாற்றிய, பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட பசுமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சித் தலைவர்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பட்டறைகள் போன்றவற்றை நவம்பர் முதல் வாரத்தில் நடத்திடலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
'உள்ளாட்சிகள் தினம்' குறித்த நிகழ்வுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அரசிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.