கொரோனா பரவல் கூடக்கூட தங்கத்துக்கு மவுசு : ஒரே நாளில் பவுனுக்கு ரூ.448 அதிகரித்தது
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.448 அதிகரித்தது.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.448 அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 506 ஆகவும், பவுனுக்கு ரூ.448 உயர்ந்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 48 ஆகவும் அதிகரித்திருந்தது.
கடந்த மார்ச் மாதம் 22 ம் தேதி ஒரு கிராம் 4 ஆயிரத்து 212 ஆகவும், ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 696 ஆகவும் இருந்தது. ஒரே மாதத்தில் கிராமுக்கு ரூ.294 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 506 ஆகவும், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 352 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 48 ஆகவும் அதிகரித்து இருந்தது. மார்ச் மாத இறுதியில் இதன் விலை ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 162 ஆகவும், பவுன் ரூ. 33 ஆயிரத்து 296 ஆக குறைந்திருந்தது. ஆனால் அதற்குப் பின் படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது ஒரு பவுன் ரு.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டில் தங்கத்தின் விலைகிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தது, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தொழில்துறை ஆட்டம் காண தொடங்கியுள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் பார்வை மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால், தங்கம் மீண்டும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
16 ம் தேதியன்று கிராமுக்கு 56ம், பவுனுக்கு ரூ.448 ம் அதிகரித்தது.. அடுத்த நாளே கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 452 ஆகவும், பவுனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 616 ஆகவும் அதிகரித்தது. அதற்குப் பின்னர் இந்த வார திங்கட்கிழமை கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 495 ஆகவும், பவுனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 960 ஆகவும் அதிகரித்தது.
நேற்று மீண்டும் பவுனுக்கு ரு.448 விலை உயர்ந்துள்ளது, பொதுமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.