பறக்கும் தங்கம் விலை : ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,250 உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் உயர்ந்தது.;
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உயர்ந்திருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 537 ஆகவும், பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 296 ஆகவும் அதிகரித்திருந்தது. தங்கத்தின் விலை இந்த இரண்டு நாட்களில் கிராமுக்கு ரூ.87 ம், பவுனுக்கு ரூ.696 ம் அதிகரித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.157 ம், பவுனுக்கு ரூ.1.256 ம் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் 15 ம் தேதியன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 380 ஆகவும், பவுன் ரூ. 35 ஆயிரத்து 40 ஆகவும் இருந்தது அடுத்து வந்த 3 நாட்களில் கிராம் ரூ.76 ம், பவுனுக்கு ரூ.608 ம் உயர்ந்திருந்த தங்கத்தின் விலை 20 ம் தேதியன்று கிராமுக்கு ரூ.45, பவுனுக்கு ரூ.360 என அதிரடியாக குறைந்திருந்தது. ஆனால், ஒரு நாள் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை அடுத்து வந்த இரண்டு நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கொரோனா இரண்டாவது அலையால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், அனைத்து பொருட்களும் விலை உயரும் அபாயம் உள்ளது. சர்வதேச பொருளாதாரம் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருப்பதால் சாமானியர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியிருப்பதே, விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அவசியத் தேவைகளுக்காக தங்கம் வாங்கும் சாமானியர்கள் இனி தங்கத்தை நினைத்து பார்க்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.