தூத்துக்குடி சென்ற விமானம் மோசமான வானிலையால் திருச்சியில் தரையிறங்கியது
சபாநாயகா் அப்பாவு உட்பட 35 பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் தவிப்பு
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தமிழக சபாநாயகா் அப்பாவு உட்பட 35 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,தூத்துக்குடியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் திரும்பி வந்து, திருச்சியில் தரையிறங்கியுள்ளது.
சென்னையிலிருந்து இன்று பகல் 1.55 மணிக்கு ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது.அந்த விமானத்தில் தமிழ்நாடு சபாநாயகா் அப்பாவு உட்பட 35 போ் பயணித்துக்கொண்டிருந்தனா்.
விமானம் தூத்துக்குடியை நெருங்கிக்கொண்டிருந்தபோது,அங்கு பலத்த காற்று,இடி மின்னலுடன் மோசமான வானிலை நிலவியது.இதையடுத்து விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த விமானம்,வழியில் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.தூத்துக்குடியில் வானிலை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகா் அப்பாவு உட்பட 35 பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் தவித்துக்கொண்டிருக்கின்றனா்.