தமிழக முதல்வர் அறிவிப்பால் கரும்பு விவசாயிகளுக்கு ஜாக்பாட்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால் கரும்பு விவசாயிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம்.;

Update: 2022-12-30 03:43 GMT

கோப்புப்படம் 

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வந்தது. இதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படும் என நினைத்த விவசாயிகள் அதிக ஏக்கர் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்தனர். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களிலும் செங்கரும்பு அதிகம் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாது என தமிழக அரசு அறிவித்ததும், கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யவில்லை என அறிவித்ததும், விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் 'அடிமாட்டு விலைக்கு' கரும்பினை கேட்டனர். இவர்களை வியாபாரிகள் என அழைப்பதே தவறு, இடைத்தரகர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.

பொங்கலுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு முன்னரே கரும்பு கட்டு விற்பனை தொடங்கும். தமிழகம் முழுவதும் விலை கொடுத்து வாங்கிய மக்களுக்கு வியாபாரிகள் விற்கும் விலை எவ்வளவு என தெரிந்திருக்கும். இப்படி கொள்ளை விலைக்கு விற்கும் இடைத்தரகர்கள், விவசாயிகளிடம் கரும்பினை ஒன்று 8 ரூபாய்க்கு விலை கேட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கரும்பு வயல்களில் கரும்பினை வெட்டாமல் வைத்திருந்தனர்.

இதனால் மனம் நொந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். சிலர் நீதிமன்றத்தில்  வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு கரும்பினை விலை கேட்பது தெரிந்து, அவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நெருக்கடிகள் அதிகரிக்கவே தமிழக முதல்வரும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதலை அதிகாரிகள் தொடங்கி விட்டனர். விலையோ இடைத்தரகர்கள் கேட்டதை விட நான்கு மடங்கு அதிகம். தமிழக முதல்வரின் இந்த ஒரு அறிவிப்பு விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்துள்ளது. இதே உத்தரவாதம் அடுத்த ஆண்டும் கிடைத்தால் மட்டுமே இனி கரும்பு சாகுபடி செய்ய வேண்டும் எனவும் பல கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்க வேண்டும். இதே பாணியில் மற்ற பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளையும் இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News