கை மீறும் ஊழல் விவகாரம்..! இப்படியெல்லாமா நடக்கும்?
தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய ஊழல் பற்றி சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் பதற வைக்கிறது. அதனை அப்படியே தந்துள்ளோம்.
அரசாங்கத்தில் ஊழல் நடப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். ஆனாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் 10 கல்லூரிகளில் பணியாற்றியதாக வந்துள்ள செய்தி தான் திகைக்க வைக்கிறது.
இந்த 189 பேர் சுமார் 2000 வேலைகளை ஆக்கிரமித்துள்ளனர். 224 கல்லூரிகளில் இப்படி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றியதாகவும் தெரிகிறது.
தனிப்பட்ட ஓரிருவர் முறைகேட்டில் ஈடுபட்டால் புரிந்து கொள்ளலாம். ஒரு கூட்டமே ஒன்று சேர்ந்து கொள்ளையடிப்பது பற்றி என்ன சொல்வது? கொள்ளையடிப்பதில் அச்சம் என்பது கடுகளவும் இல்லையென்றால்தான் இப்படி நடக்கும்.
இவர்கள் யாரும் பணியாற்றவில்லை. பல இடங்களில் சம்பளம் வாங்கியிருக்கின்றனர். என்ன அசுர உழைப்பு? எத்தனை ஆண்டுகளாக இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. பல்கலைக் கழக நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். இப்படிப்பட்ட பேராசிரியர்கள் எந்த மாதிரியான மாணவர்களை உருவாக்குவார்கள்?
இந்த ஊழலை பல்கலைக்கழகமே கண்டு பிடித்திருந்தால் கூட பரவாயில்லை. வெளியிலிருந்து புகார் அளித்த பின் விவகாரம் வெளி வந்துள்ளது. இப்போது , ' ஆமாம். அப்படித்தான் நடந்துள்ளது. இது பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளோம் '.என்று கூறியுள்ளது பல்கலைக்கழகம்.
ஏற்கெனவே, போலி ஆசிரியர், போலி டாக்டர்கள், போலி வக்கீல், போலி ரேஷன் கார்டுகள் என்று சாதனை படைத்துள்ள மாநிலம் நம்முடையது. அத்துடன் இந்த சாதனையும் சேர்ந்துள்ளது.
போலி பல்கலைக்கழகம் எங்காவது நடந்து கொண்டிருக்கிறதா என்று யாராவது கண்டுபிடித்து சொல்லும் போது தான் தெரியும். நல்ல வேளை. போலி எம்.எல்.ஏ.க்கள், போலி அமைச்சர்கள் செயல்படுவதாகவோ, ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் அமைச்சராகவும், மூன்று மாநிலங்களில் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதாக இதுவரை தகவல் வரவில்லை.
நிலைமை கைமீறி போய் கொண்டு இருக்கிறது. நீதித்துறை தான் இதற்கு சரியான வழிகாட்ட முடியும் என மக்கள் நம்புகின்றனர். உயர்கல்வித்துறையில் நடந்துள்ள இந்த ஊழல்களை கேள்விப்பட்ட தமிழகத்தின் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
நல்ல நெறிமுறைகளை கற்பிக்கவேண்டிய கல்வித்துறையிலேயே இப்படி ஊழல் மலிந்துகிடக்கும்போது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கித்தர முடியும்?