இ.வி.எம்.இயந்திரத்தில் 'நோட்டா' இல்லை- இது வாக்காளர்களுக்கு தெரியுமா?

இ.வி.எம்.இயந்திரத்தில் 'நோட்டா' இல்லை- இது வாக்காளர்களுக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;

Update: 2022-02-14 14:27 GMT

தமிழகம் முழுவதும் வருகிற 19ம்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும்  4 தினங்களே உள்ளன.இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளின் 1374 கவுன்சிலர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளின்3843 கவுன்சிலர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளின்7621 கவுன்சிலர் பதவியிடங்கள் என மொத்தம்12838 பதவியிடங்களுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அவரவர் வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு்பட்டு வருகிறார்கள். அவர்களை ஆதரித்து கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க. தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. 
கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காணொலி மூலம் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் இறுதி வேட்பாளர்கள் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அச்சிடப்பட்டு வேட்பாளர் சீட்டுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் இ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டு விட்டன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பவர்களுக்கான 'நோட்டா' பட்டன் இல்லை என்பது புதிய தகவலாகும். இதனால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் என்கிற எண்ணத்தில் உள்ள வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் மட்டும் நோட்டா சின்னம் சுமார் மூன்றரை லட்சம் வாக்குகளை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டா உரிமை பறிக்கப்பட்டு இருப்பது குறித்து திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் தாமஸ் கூறுகையில்


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் நோட்டாவில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதற்காக தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி நோட்டா இ.வி.எம். இயந்திரத்தில் பொருத்தப்பட்டது. இது அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும் அமலாக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்மட்டும் அதனை இடம் பெற செய்யாதது  ஏன் என தெரியவில்லை.

ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ அல்லது களத்தில் உள்ள வேட்பாளர்கள் யாரையும் எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அரசு சொல்கிற படி நான் வாக்களிப்பதை கடமையாக கொண்டிருக்கிறேன் என எண்ணும் வாக்காளர்கள் தங்களது எண்ணத்தை நோட்டா இல்லை என்றால் எப்படி வெளிப்படுத்த முடியும்?

வாக்களிப்பது வாக்காளர்கள் அனைவரின் உரிமை, கடமை என கூறும்  மத்திய மாநில அரசுகள் அதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளில் ஒன்றான நோட்டாவை இந்த தேர்தலில் பறித்து இருப்பதை மீண்டும் வழங்கவேண்டும் என்பதே வாக்காள பெருமக்களின் வேண்டுகோளாகும். எனவே மாநில தேர்தல் ஆணையம் தனது முடிவினை மறு பரிசீலனை செய்து இ.வி.எம்.களில் நோட்டா பட்டன் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.  

Tags:    

Similar News