ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்: மருத்துவனை நிர்வாகம் அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-03-16 10:15 GMT

ஈவிகேஎஸ் இளங்கோவன் (பைல் படம்)

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சோனியா காந்தியிடம் வாழ்த்து பெற ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றிருந்தார். டெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரது உதவியாளர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்களுக்கு மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அவருடைய உதவியாளர் கூறினார்.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்கு குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களில்  அதிமுகவை தவிர மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News