தனித்து விடப்பட்ட ஓ.பி.எஸ்: மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் என்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நிலையில், ஓபிஎஸ்-சின் அரசியல் எதிர்காலம் பூஜ்யம் தான் எனக் கூறுகிறது இபிஎஸ் தரப்பு;
ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நிலையில், இனி ஓபிஎஸ்-சின் அரசியல் எதிர்காலம் பூஜ்யம் தான் எனக் கூறுகிறது இபிஎஸ் தரப்பு. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என்கிறது ஓபிஎஸ் அணி. மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ்ஸின் வழக்கறிஞர் திருக்குமரன். றுகிறார்
ஆனால், அரசியல் நோக்கர்கள் கூற்றுப்படி, சீராய்வு மனுத்தாக்கல் செய்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பே மீண்டும் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர் . அரசியல் ரீதியாக தனது பலத்தை வெகுவாக இழந்து விட்ட ஓபிஎஸ், ஆதரவாளர்களுடன் இணைந்து, சசிகலா துணையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கள அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏறக்குறைய தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ், முதலில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் என கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் போல, நிர்வாகிகள் பலர் கூண்டோடு இபிஎஸ் அணிக்குத் தாவினால், ஓபிஎஸ் நிலை மேலும் கேள்விக்குறியாகக்கூடும்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இ.பி.எஸ்.,க்கு தெளிவாக வழி கொடுத்து விட்டதால், இரட்டை இலை சின்னத்தில் நின்று, தான் வெற்றி பெற்ற போடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விடலாமா? என ஓ.பி.எஸ்., ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
அப்படி போடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் ஓ.பி.எஸ்., களம் இறங்கி தனது மக்கள் செல்வாக்கினை நிலை நிறுத்தவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அப்படி போட்டியிட்டால், தி.மு.க.,வினர் ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு கொடுப்பார்கள். தி.மு.க., ஓட்டுகள் ஓ.பி.எஸ்.,க்கு விழும் என்றால், அரசியல் களம் எப்படி மாறும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ளலாம் என தி.மு.க.,வினரே பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
இந்த தகவல் தேனி மாவட்டத்தில் பலராலும் பேசப்பட்டு வந்த, நிலையில் இந்த தகவல் அறிந்த ஓ.பி.எஸ்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இ.பி.எஸ்., அணி தான் தி.மு.க.,வின் பி டீம்., நாங்கள் இல்லை எனக்கூறி உள்ளார். விரைவில் ஓ.பி.எஸ்., தினகரனையும், சசிகலாவையும் சந்திக்க உள்ளார் என்று வெளிவந்த தகவல்களை அவர் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.