அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா?

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களில் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-18 13:36 GMT

அரசு மேனிலைப்பள்ளி (கோப்பு படம்)

ஜூலை 12, 2024 ஆம் நாள் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் மின்னஞ்சல் மூலம் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் (minister_schedu@tn.gov.in) கல்வித்துறைச் செயலாளருக்கும் (schsec@tn.gov.in) கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள் அதிகமாக உள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவும் மதிய உணவும் கிடைக்கிறது. ஆனால் கற்றல் நிகழ்த்தப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியை மறுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. தமிழக கல்வி அமைச்சர் இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கைகள்:

1. பதிவு மூப்பு முறையில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பில் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கும் பொருத்தப்பாடின்மைக்கான சட்டபடியான நியாயங்களை தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையாக எடுத்துரைக்கவில்லை. இதனால் மூத்த ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் இரண்டு கல்வி ஆண்டுகளாகத் தடைபட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முன்பே பணியில் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசும் இவ்வழக்கில் இணைந்துள்ளது. குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பதவி உயர்வு முறையில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உச்ச நீதி மன்றத்தில் இடைக்காலத் தீர்ப்பைப் பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியை 14 ஆண்டு காலம் கடந்த பிறகு நிபந்தனையாக விதித்தால் கல்வித் துறையில் ஏற்பட இருக்கும் நிர்வாகச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் ஆசிரியர் பணி நிலைகளில் உருவாகும் மூத்தோர் இளையோர் முரண்பாடுகளையும் ஊதிய முரண்பாடுகளையும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துரைத்து விரைவாக இறுதித் தீர்ப்பைப் பெற வேண்டுகிறோம்.

2. தற்காலிக ஆசிரியர் நியமனம்: தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று பள்ளியின் அன்றாட நடைமுறைகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ள மூத்த ஆசிரியரால் வழக்கமான கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியாது.

தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் இல்லாத ஈராசிரியர் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் பாதிப்புகளையும் பள்ளிகளில் ஏற்படும் நிர்வாக இடர்பாடுகளையும் கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ள ஆசிரியரின் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டுகிறோம்.

3. தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்கள் மூலம் முழுமையாக நிரப்பும் வரை கடந்த கல்வி ஆண்டில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தற்காலிக ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியமும் வழங்க வேண்டுகிறோம்.

கல்வி மூலம் சுரண்டலில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே அரசாங்கத்தால் சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

4. ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:20 ஐ மீண்டும் பின்பற்றுதல்: ஆசிரியர் நியமனத்தில் உரிய கவனம் செலுத்தாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பல விதமான புதுப்புது திட்டங்களும் பாடத்திட்டம் சாரா செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

பலவிதமான செயல்பாடுகளால் பாடத்திட்டம் சார்ந்த கற்பித்தல் பணிகளை அரையும் குறையுமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் பாடத்திட்டம் சார்ந்த குறைந்த பட்சக் கற்றல் இலக்குகளையும் பெற முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் 100% பொதுத் தேர்ச்சிக்கான அழுத்தங்களையும் ஆசிரியர்கள் சுமக்க வேண்டியுள்ளது.

மாணவர்களிடம் அதிகரித்து வரும் போதை, வன்முறை போன்ற நடத்தைச் சிக்கல்களையும் ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதுப்புது திட்டங்களும் பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளும் மாணவர்களுக்குப் பயனளிக்கும். ஆனால் அவை தொடர்ந்து தொய்வின்றிச் சிறப்பாக மாணவர்களைச் சென்றடைய, போதுமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது இன்றியமையாதது என்பதை அரசு உணர வேண்டும். அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட 1997 வரை நடைமுறையில் இருந்த 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதாச்சார முறையை மீண்டும் பின்பற்ற வேண்டுகிறோம்.

5. தமிழ் வழி - ஆங்கில வழிப் பிரிவுகளுக்குத் தனித் தனி ஆசிரியர்: 2012 – 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஆனால், ஆங்கில வழிப் பிரிவுக்கு தனி ஆசிரியர்கள் இன்று வரை நியமிக்கப்படவில்லை. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே நடந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் வழிப் பிரிவுகள் இருந்தாலும் மிகக் குறைவான மாணவர்களே உள்ளனர். குறிப்பாக கற்றல் திறன் குறைவானோர் என்று ஒதுக்கப்படும் மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் படித்து வருகின்றனர். தமிழ் வழி, ஆங்கில வழி இரண்டு வகைப் பிரிவுகளுக்கும் ஒரே ஆசிரியர், ஒரே வகுப்பில், ஒரே நேரத்தில் கற்பிக்கும் அவலம் அரசுப் பள்ளிகளில் பத்தாண்டு கால நடைமுறையாக உள்ளது.

ஆனால், ஆசிரியர்களின் சிரமங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசுப் பள்ளிகளில் அரோக்கியமான கற்றல் கற்பித்தல் சூழல் அமைய தமிழ் வழி – ஆங்கில வழிப் பிரிவுகளுக்கு தனித் தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டுகிறோம்.

6. மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் (+1, +2) பாடப் பிரிவுகள்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலத் தாழ்வுகளால் பெரும்பாலான அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பாடப் பிரிவுகள் கைவிடப்படுகின்றன. தேவையான பாட ஆசிரியர்கள் உடனுக்குடன் நியமிக்கப்படுவதில்லை.

பல மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழிப் பிரிவுகளே இல்லாதததால் தமிழ்நாடு அரசுப் பணிகளில் உள்ள தமிழ் வழிப் படிப்புக்கான இட ஒதுக்கீடு வாய்ப்பை ஏழை மாணவர்கள் இழந்து வருகின்றனர். மாணவர்கள் விரும்பும் பாடங்களைப் படிக்க தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் தமிழ் வழிப் பாடப் பிரிவும் மாணவர் விரும்பும் பாடப்பிரிவுகளும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உறுதி செய்யப்பட்டு அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் தாமதமின்றி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

7. தமிழ் வழிக் கல்விக்கு முதன்மைக் கவனம்: அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிப் பிரிவுக்கும் ஆங்கில வழிப் பிரிவுக்கும் தனித்தனி ஆசிரியர் நியமிக்காத காரணத்தால் பல அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிப் பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான வசதியான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க வைக்கின்றனர்.

இதைப் பார்த்து ஏழைப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவில் சேர்க்கின்றனர். வசதியான பிள்ளைகளுக்கு தனியார் பள்ளிகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியர் கற்பிக்கும் நிலை உள்ளது. வீடுகளில் படித்த பெற்றோர்கள் கற்றலுக்குத் துணைபுரிகின்றனர்.

தனிப்பயிற்சி வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் பள்ளிக்கு வெளியில் கிடைப்பதில்லை. இதனால் ஆங்கில வழியில் கற்கும் ஏழைக் குழந்தைகள் அறிவுக்குருடாகும் நிலை உள்ளது.

குழந்தைகளின் இயல்பான அறிவாற்றல் வளர ஆங்கில வழிக் கல்வி தடையாக உள்ளது. தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்தான உலகளாவிய உண்மைகளைக் கவனத்தில் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழிப் பிரிவில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News