4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து, நான்கு மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்துக்கு அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, மேற்படி மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.
இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்