தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர்.

Update: 2024-02-06 03:17 GMT

கோப்புப்படம் 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 மணி வரை ஆலோசனை நடத்த உள்ளனர். நாளை புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News