பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் வசூல்..!
கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் விதிக்கப்படும்.;
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:.
பாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனத்தின் முகப்பு கண்ணாடியின் உள் பக்கத்தில் பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் வாகன ஓட்டிகள் வருவதால் சுங்க சாவடிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இது இதர வாகனங்களில் வருபவர்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க வேண்டும். வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் இந்த பிரச்னைகள் வராது.
எனவே கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்க சுங்க சாவடிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து சுங்க சாவடிகளிலும் அறிவிப்பு பலகையில் தகவல் எழுதி வைக்க வேண்டும். பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களின் பதிவு எண்களை சுங்க சாவடிகளில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இதன் மூலம் வசூலிக்கப்படும், இரு மடங்கு கட்டணம் சுங்க சாவடியின் வாகன வரிசையில் குறிப்பிட்ட வாகனம் வந்ததற்கான அத்தாட்சியாக இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.