மிதிவண்டி வேண்டாம், சைக்கிள் தான் வேணும்..... அடம்பிடித்த வேட்பாளர்.... சிரிப்பலையில் நிறைந்த அரங்கம்
ஈரோடு இடைத்தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மிதிவண்டி சின்னம் வேண்டாம், சைக்கிள் தான் வேண்டும் என கேட்டதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.;
பைல் படம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வெளியிட்டார்.
மேலும், வேட்பாளர்களுக்கான சின்னங்களையும் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, காங்கிரஸுக்கு கை சின்னம், அதிமுகவிற்கு இரட்டை இலை, தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. டார்ச் லைட் மற்றும் குக்கர் சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு மிதிவண்டி சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவித்தார். அதற்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் , தனக்கு சைக்கிள் சின்னம் தான் வேண்டும் என கேட்டதால், சின்னம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
இதையடுத்து, மிதிவண்டி, சைக்கிள் ஆகிய இரண்டும் ஒன்று தான் என அங்கிருந்தவர்கள் எடுத்துக் கூறியதால், சமாஜ்வாதி வேட்பாளர் சமாதானம் அடைந்தார்.