ஆயிரத்திற்கே அலறுகிறீர்களே... அடுத்து சிக்கினால் ரூ.10 ஆயிரம் தெரியுமா?

வாகனத்தில் செல்லும் போது மொபைல் போன் பேசினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கே கடும் அதிருப்தி தெரிவிக்கும் மக்கள் அடுத்து சிக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்பதை மறந்து விட்டனர்.;

Update: 2022-12-01 02:52 GMT

பைல் படம்.

நாடு முழுவதும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காரணம் இந்த சட்டத்திருத்தத்தில் உள்ள கடுமை, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ரோட்டில் உயிர்ப்பலி ஏற்பட அனுமதிக்க கூடாது என்பது தான். இதனால் தமிழக அரசும் இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தியது. தவிர கூடுதலாக சில அம்சங்களை சேர்த்துள்ளது என்பது தான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். புதிய திருத்தங்கள் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இது வந்தால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் நிச்சயம் மிகுந்த நல்ல பெயர் கிடைக்கும்.

தற்போது உள்ள சட்டப்படி ரோட்டில் மொபைல் போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் முதல் முறை ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் எந்த இடத்திலும் அந்த நபர் இரண்டாவது முறை மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் தானாக வந்து விடும். போலீசாரின் வேலை அவரையும், அந்த வண்டியையும் படம் எடுத்து, அந்த வண்டி நம்பருடன் கம்ப்யூட்டரில் அப்லோடு செய்தால் போதும். கம்ப்யூட்டரே அபராதம் விதித்து அந்த நபருக்கு மெசேஜ் சென்று விடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராத பணத்தை செலுத்தாவிட்டால் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியது வரும்.

அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வாகனம் ஓட்டுவது (கனரக வாகனங்களின் கதை தனி. இந்த செய்தி போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டும்) என எல்லா விஷயத்திற்கும் இதேபோல் முதல் முறை சிறிய அளவு அபராதமும் அடுத்த முறை 10 மடங்கு கூடுதல் அபராதமும் விதிக்கப்படும். இதற்கேற்ற வகையில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் தற்போது தங்களது சட்டைப்பட்டனில் கேமராவை மாட்டிக் கொண்டு சுற்றுகின்றனர். யாருடனும் சண்டை போட வேண்டியதில்லை. யாரையும் திட்ட வேண்டியதில்லை. எச்சரிக்க வேண்டியதில்லை. சட்டையை பிடித்து இழுத்து மொபைலில் டிரென்ட் ஆக வேண்டியதில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு ஏன் காரணம், வேகமாக வண்டியை ஓட்டு என சத்தமாக கதற வேண்டியதில்லை. வாகனத்தை படம் எடுத்து நம்பருடன் கம்ப்யூட்டரி்ல் காரணத்துடன் ஏற்றி வி்ட்டால் போதும். சட்டம் தன் வேலையை சரியாக செய்து விடும்.

தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இப்போது அதனை 25 ஆயிரமாகவும், கூடுதலாக 5 ஆயிரமும் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட வரைவு உட்பட எல்லா விஷயங்களும் நிறைவுக்கு வந்து விட்டன. வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல... வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் குடித்திருந்தால் சிக்கல் தான். அபராதம் செலுத்தி தான் ஆக வேண்டும்.

போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால் தானே இந்த சிக்கல் என நினைக்காதீர்கள். போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகர் பகுதிகள் முழுக்க கண்காணித்து வருகின்றனர். அவர்களும் இந்த விதிமீறல்களை கண்டு பிடித்து கம்ப்யூட்டரில் ஏற்றி விட்டால் வாகன ஓட்டிகள் பைன் கட்டுவதை தவிர வேறு வழியில்லை. நோ பார்க்கிங் மற்றொரு முக்கிய விஷயம். முதன் முறை நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம். அடுத்த முறை தமிழகத்தில் எந்த இடத்தில் நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினாலும், ஆயிரத்து 500 ரூபாய் பைன் கட்ட வேண்டியிருக்கும். மூன்றாவது முறை இன்னும் உயரும் என போலீசார் சொல்லிச் சிரிக்கின்றனர். மொத்தத்தில் தொழில்நுட்பம் போலீசாரின் டென்சனை குறைத்துள்ளது எனவும் அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News