கல்லால் அடி வாங்கியாச்சு, கையிலும் அடி வாங்கியாச்சு! : தொண்டர்களை தாக்கும் அமைச்சர்கள்

அடுத்தடுத்து அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவதை தமிழக மக்கள் மட்டுமல்ல., தி.மு.க. தொண்டர்கள் கூட விரும்பவில்லை;

Update: 2023-01-28 05:04 GMT

உதயநிதி கலந்து கொண்ட விழாவில் தொண்டர்களை தாக்கிய அமைச்சர் நேரு.

தமிழக அமைச்சர்களின் பேச்சும், செயல்பாடுகளும் அடிக்கடி சர்ச்சையாகி திமுகவுக்கு அவப்பெயரை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான் ஸ்டாலின் ஒரு அறிக்கையில், ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை உள்ளது. இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோரும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடு தான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கி விடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேச வேண்டும் என உருக்கமாக கேட்டுக் கொண்டதை திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களே சட்டை செய்யவில்லை.

பேருந்தில் இலவச பயணத்தை ஓசி டிக்கெட் எனக்கூறி அமைச்சர் பொன்முடி பேசி பிறகு மன்னிப்பு கேட்டார். மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தாக்கியதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

திமுக எம்.பி ஆ.ராசாவின் மனுஸ்மிருதி தொடர்பான சர்ச்சை பேச்சும் எதிர்கட்சிகளிடம் சிக்கி சின்னாபின்னமானது. அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நடைபெற்ற நீர் நிரம்பிய குடங்களை வேகமாக எடுத்துக் கொடுக்காததால் திமுக கவுன்சிலரின் பின்னந்தலையில் கையால் தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர் நாசர் திமுக நிர்வாகி ஒருவரை கல்லை வீசி தாக்கிய சம்பவத்துக்கு கண்டனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடையிலேயே திமுக தொண்டர்களின் தலையில் தாக்கி கொத்தடிமை போல நடத்தும் கே.என். நேருவின் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.


சேலம் தலைவாசலில் அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது உதயநிதிக்கு கைகொடுக்க வந்த திமுக தொண்டரை அமைச்சர் கே.என்.நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார். அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை பிடித்து அங்கிருந்து தள்ளினார். இதை பார்த்து பதறிய உதயநிதி, அமைச்சரிடம் ஏண்ணே இப்படி.. இல்ல வேண்டாம் என்று சமாதானப்படுத்தினார். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகிறது.


தொண்டர்களை அடிமைகள் போல நடத்துகிறார்கள் திமுக அமைச்சர்கள். ஸ்டாலின் வழக்கம் போல அமைதியாக மவுனம் காக்கிறார். திமுக தொண்டர்களுக்கு இது தேவை தான் என்று ஸ்டாலின் நினைக்கிறாரோ என்னவோ? கே.என்.நேரு தொண்டர்களை விரட்டி அடிப்பதும், ஆவடி நாசர் கல் எறிவதும் திமுவின் எதிர்காலத்திற்கு பெருங்கேடு! இந்நிலைமை இப்படியே தொடர்ந்தால், அடுத்து என்னவாகும். தி.மு.க., தொண்டர்கள் என்ன நினைப்பார்கள் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும், கண்டித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. அடுத்தடுத்து அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவதை தமிழக மக்கள் மட்டுமல்ல... தி.மு.க., தொண்டர்கள் கூட விரும்பவில்லை. எனவே தி.மு.க.,வின் எதிர்காலம் எதனை நோக்கி நகர்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News