எம்.பி, எம்.எல்.ஏ. பெயர் கூட தெரியாத கொடைக்கானல் மலை கிராம மக்கள்
எம்.பி, எம்.எல்.ஏ. பெயர் கூட தெரியாத வகையில் கொடைக்கானல் மலை கிராம மக்கள் உள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் நீதிபதி கார்த்திக் தலைமை யில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை கேட்டு நீதிபதி மற்றும் முகாம் அமைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் விவசாய கூலிவேலை மற்றும் கிடைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். கீழானவயலை அடுத்து அமைந்துள்ள மஞ்சம்பட்டி, நாட்டாம்பட்டி, மூங்கில்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் நடத்திய நீதிபதி மற்றும் வக்கீல்கள் குழுவினரிடம் தங்கள் குறைகளை கொட்டி தீர்த்தனர்.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஒரு சதவீதம் கூட கிடைக்க வில்லை. ஓட்டு கேட்க ஊருக்கு வந்த தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களை எட்டிபார்க்க வில்லை. தற்போது இப்பகுதியின் ஊராட்சி தலைவர் யார், எம்.எல்.ஏ, எம்.பி. யார் என்றுகூட எங்களுக்கு தெரியாது. ஓட்டு போடும் எந்திரமாக எங்களை நினைத்து அனைவரும் மறந்துவிட்டனர். அரசின் நலத்திட்டம் வழங்குவதற்கு எந்தவித முகாம்கள் அமைக்கவில்லை. சாலைவசதி இல்லாத மலைகிராமங்களில் வசித்து வருகிறோம். ஆரம்பகல்வி, சுகாதார நிலையம், மின்சாரவசதி, ரேசன்கடை ஆகியவைகூட எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார்கார்டு, டிஜிட்டல் ரேசன்கார்டு ஆகியவை வழங்கப்பட வில்லை. பிறப்பு-இறப்பு சான்றிதழ் பற்றி என்ன வென்றே தெரியாதநிலை யில் உள்ளனர். பல கி.மீ தூரம் வனப்பகுதியில் நடந்து சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறோம். இதில் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிட்டனர். அரசு அதிகாரிகளை தங்கள் பகுதியில் பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. இந்த கிராமங்கள் அரசின் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகமே எங்களுக்கு உள்ளது.
கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்த கிராமங்களாக இருந்தாலும் இப்பகுதி உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ளது. இதனால் பல சமயங்களில் எங்களது தாலுகா எது வென்றே தெரிவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு உடுமலைபேட்டை வழியாக இப்பகுதியை இணைக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் அதன்பிறகு கண்டுகொள்ளவில்லை. மஞ்சம்பட்டி கிராமத்தில் மட்டும் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதேபோல 4 கிராமத்திலும் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சட்டவிழி ப்புணர்வு தேவையில்லை என்றும், அடிப்படை வசதிகள்தான் முதற்கட்ட தேவை என்பதும் ஏற்பட்டாளர்கள் தெரிந்து கொண்டனர்.
இதுகுறித்து நீதிபதி கார்த்திக் தெரிவிக்கையில், கொடைக்கானல் மலைகிராமங்களான மூங்கில்பள்ளம், மஞ்சம்பட்டி, நாட்டாம்பட்டி கிராமங்களில் பலருக்கு ஆதார், ரேசன்அட்டைகள் கூட இல்லை. எனவே இங்கு வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ரேசன் பொருட்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொடுக்க வேண்டும். குடிநீர், சுகாதார வசதி, ஆரம்பகல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குடியுரிமையை உறுதி படுத்தும் வகையில் அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வனவிலங்குகளுக்கு நடுவே தங்கியுள்ள அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்காலத்தில் வாழ்ந்துவருவது போன்ற நிலையில் உள்ள அவர்களை நவீன உலகத்திற்கு அழைத்துவரவேண்டும் என்றார்.