உழவர் தியாகிகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் ஜோதி மணி எம்.பி.- பா.ஜ. நிர்வாகி மோதல்
உழவர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஜோதி மணி எம்.பி.- பா.ஜ. நிர்வாகி இடையே மோதல் ஏற்பட்டது.;
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978 ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கட்டை எடுத்தால் பட்டையை எடுப்போம் என்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு விவசாயிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நாச்சிமுத்து கவுண்டர், கருப்பசாமி ஆசிரியர், சின்னசாமி கவுண்டர், சுப்பிரமணி கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம் ஆகிய உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு மலர் வளையம் மற்றும் மலர்கள் தூவி 45 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று நடைபெற்றது.
விவசாயிகள் சங்கத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.
அப்போது பேசிய, ஜோதிமணி எம்.பி. 2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஒரு பகுதி பொதுமக்களுக்கும், மற்றொரு பகுதி தொழிலதிபர் அதானிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்றும் ஒதுக்கப்பட்ட தொகை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு செல்லாமல் நேரடியாக அதானி என்ற ஒரு நண்பருக்கு செல்கிறது என்றும் ஜோதிமணி கூறினார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த பா.ஜ.க. நிர்வாகி சதாசிவம் என்பவர் திடீரென எழுந்து, ஜோதிமணி எம்.பி.யை பார்த்து இது உங்கள் கட்சி மேடை அல்ல. இது பொது மேடை அனைத்து அரசியல் கட்சியினரும் இருக்கும் பொது மேடையில் அரசியல் பேசக்கூடாது என்று அருகே சென்று தகராறில் ஈடுபட்டார்.
இருப்பினும், தொடர்ந்து பேசிய ஜோதிமணி விவசாயிகளுக்கு ஏன் நிதி வரவில்லை. விவசாயிகளுக்கு ஏன் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகளை ஏன் பிரதமர் சந்திக்க மறுக்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத அனைவரும் திகைத்து நின்றனர்.
உடனடியாக போலீசாரும் விவசாயிகள் சங்கத்தினரும் பா.ஜ.க. நிர்வாகியை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.