ரூ.7.70 கோடியில் தடுப்பணைக்கு பூமி பூஜை : அமைச்சர் ஐ.பெரியசாமி தொடக்கம்
அகரம் கிராமத்தில் உலகம்பட்டி அருகே 90 மீட்டர் நீளத்தில், 2.56 மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட இருக்கிறது.;
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதிக்குள்பட்ட அகரம் பேரூராட்சி, உலகம்பட்டி அருகே ரூ.7 கோடியே 70 லட்சத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை தடுப்பணை அமைய உள்ள இடத்தில் நேற்று நடந்தது. பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்று தடுப்பணைக்கான பூமி பூஜை நடத்தி வைத்தார்.
பின்னர், அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் நீண்ட நாள் கனவான உலகம்பட்டியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை தற்போது தொடங்கி வைத்து, அவர்களின் கனவை நனவாக்கியுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றும் மாங்கரையாறு கோடல்வாவி, மாங்கரை, முத்தனம்பட்டி, சில்வார்பட்டி, அகரம் ஆகிய கிராமங்கள் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது.
இந்த நிலையில், தற்போது அகரம் கிராமத்தில் உலகம்பட்டி அருகே 90 மீட்டர் நீளத்தில், 2.56 மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தட்டுப்பணைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தால் மாயாண்டி குளத்துக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும் உலகம்பட்டி கிராமத்தில் 96 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவர் கூறினார்.