பழனியில் மொத்த மளிகை விற்பனை வியாபாரிகள் கடையடைப்பு : பொதுமக்கள் தவிப்பு

பழனி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக மொத்த மளிகை விற்பனை செய்யும் வியாபாரிகள் கடையடைப்பு செய்துள்ளனர்.

Update: 2021-06-10 01:39 GMT

பழனி காந்தி மார்க்கெட் பகுதி 

பழனி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக பழனி முழுவதும் உள்ள மொத்த விற்பனை செய்யும் மளிகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது.கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி மளிகைக் கடைகள் அனைத்தும் காலை 7மணிமுதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி நகராட்சிக்கு சொந்தமான காந்திமார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க காலை7மணி முதல் 10மணிவரை மட்டுமே அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் காந்திமார்க்கெட்டில் இருக்கும் கடைகள் அனைத்தும் மொத்த விற்பனைக் கடைகள் என்பதால் அதிகாரிகள் கொடுக்கும் நேரம் போதாது என்றும், அரசு அறிவித்தபடி மாலை 5 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்காததால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமாரிடம் தகவல் தெரிவிக்க முயன்றபோது அவர் திண்டுக்கல்லில் இருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை.எனவே தொலைபேசியில் தொடர்புகொள்ள பலமுறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைசச்ர் சக்கரபாணியின் சொந்த தொகுதியான ஒட்டன்சத்திரத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் காலை முதல் மாலைவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பழனியில் மட்டும் அனுமதி அளிக்காததால் இன்று காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக பழனி நகரில் உள்ள மளிகை கடைகள், அரிசி கடைகள் உள்ளிட்ட மொத்த விற்பனைக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் பழனி இனி மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மொத்த விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டதால் சில்லரை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News