விடுமுறைக்காக குவிந்த சுற்றுலா பயணிகளால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தினருடன் படையெடுத்தனர்.அதன்படி, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் டைகர்சோலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் நகருக்குள் சென்றன.பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களையும், பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், மன்னவனூர் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் பயணம் சென்றும் பொழுதுபோக்கினர். இதற்கிடையே கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்தது.அதன் தொடர்ச்சியாக 2 நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழையும், பலத்த மழையும் பெய்தது. மன்னவனூர் பகுதியில் உள்ள சில விளை நிலங்களில் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
தொடர் மழையால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை நிரம்பி வழிகிறது. பூண்டி கிராமத்தில் உள்ள அசன்கோடை ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.இதுதவிர வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.