கொடைக்கானலில் போக்சோவில் கைது செய்யப்பட்ட பூசாரி
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி வைத்திருந்த செல்போன் ஐ.எம்.இ. ஐ நம்பர் மூலம் தேடினர். அதில் செல்போனில் இருந்து மதுரை, நெல்லை, புதுக்கோட்டை பகுதிகளுக்கு பல மணிநேரம் பேசியது தெரியவந்தது. மேலும் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி ராமசுந்தர் என்பவரது செல்போனுக்கும் பேசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுமிக்கு செல்போனின் இன்ஸ்டாகிராம் மூலம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்துள்ளார். மேலும் திருப்பத்தூரைச் சேர்ந்த சரண்ராஜ் (வயது 21) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. காதலனை பார்ப்பதற்காக ஒரு பையில் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு சென்றார்.
அப்போது பூசாரி ராமசுந்தர் சிறுமியிடம் விசாரித்து தற்போது பஸ் இல்லை எனக்கூறி தனது அறையில் தங்க வைத்து, ஒருவாரம் சிறுமியை அறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராமசுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..