பழனி மலைக்கோவிலில் ரோப்கார் சேவை இன்று முதல் துவக்கம்
பழனி மலைக்கோவிலில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவுற்று இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.;
பழனி மலைக்கோவில் மீண்டும் துவங்கப்பட்ட ரோப்கார் சேவை.
பழனி மலை முருகன் கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகிய வசதிகள் உள்ளது. பழனி மலைக் கோவிலுக்கு ரோப்கார் மூலம் விரைவாகவும் எளிதாகவும் இரண்டு நிமிடங்களில் சென்று வரலாம். முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரோப்கார் பெரும் பயனாக உள்ளது.
ரோப்கார் சேவையானது தினமும் ஒரு மணி நேரமும், மாதம் ஒருநாளும், ஆண்டிற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் காரில் ஒரு மாதத்திற்கும் மேலாக வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பழுதடைந்த மோட்டார், சாஃப்ட், இரும்பு வட கம்பி உள்ளிட்ட பாகங்கள் சோதனை செய்யப்பட்டு புதியதாக மாற்றிமைக்கப்பட்டு, பணிகள் நிறைவுற்று கடந்த இரண்டு நாட்களாக சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இதனையடுத்து இன்று முதல் ரோப்கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக ரோப்கார் நிலையத்தில் பூஜைகள் செய்யப்பட்டு ரோப்கார் பெட்டிகளுக்கு தீபாராதனைகள் செயய்ப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப்கார் சேவை துவங்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.